தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டிவனத்தில் தனியார் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த சர்க்கரை கட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முக பாண்டி (வயது 21). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கையாளர் தொடர்பு அலுவலர் பணிக்கு வேலை கிடைத்தது.
இதற்காக திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள ஒரு விடுதியில் வாடகைக்கு தங்கி, வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு, மீண்டும் நேற்று காலை திண்டிவனம் வந்தார். அப்போது வங்கியில் இருந்த அவர், விடுதிக்கு சென்றுவிட்டு வருவதாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதையடுத்து வங்கி ஊழியர்கள், சண்முக பாண்டி அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் போலீசார் சண்முக பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் சண்முக பாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.