இளம்பெண்ணை ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் கைது
இளம்பெண்ணை ஏமாற்றிய தனியார் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
காரைக்குடி சாமியார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(வயது 33). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். காரைக்குடி அடுத்த ஒரு கிராமத்தை சே்ாந்தவர் 20 வயது இளம்பெண். இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது நிறுவனத்தின் கடன் சம்பந்தமாக இளம்பெண் அந்த வங்கிக்கு அடிக்கடி வந்து சென்றபோது குமரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குமரேசன் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி ஒரு விடுதிக்கு அழைத்து சென்று அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதில் பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்யும்படி குமரேசனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், கர்ப்பத்தை கலைத்துவிடு பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறி தனியார் டாக்டரிடம் அழைத்து சென்று கருவை கலைத்துள்ளார். அதன்பின்னர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளதாக குமரேசன் கூறியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் திருப்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கி மேலாளர் குமரேசனை கைது செய்தார்.