சிதம்பரத்தில்தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
சிதம்பரத்தில் தனியார் பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
சிதம்பரம்,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கம் விரிவாக்க பணிகளை கண்டித்து நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் 25 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
கண்ணாடி உடைப்பு
இந்நிலையில் சிதம்பரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது. அந்த வகையில் சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு மதியம் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் சின்னமார்க்கெட் அருகே சென்றபோது, மர்ம நபர்கள் கல்வீசி பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
உடனே டிரைவர் பஸ்சை அங்கு நிறுத்தினார். தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். தொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து காட்டுமன்னார் கோவிலுக்கு சென்று விட்டு, பின்னர் சிதம்பரம் திரும்பி வந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.