தனியார் கல்லூரி பஸ் மோதி சிறுவன் சாவு


தனியார் கல்லூரி பஸ் மோதி சிறுவன் சாவு
x

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதியதில் சிறுவன் இறந்தான். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 2 பஸ் கண்ணாடியை அடித்து உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்

விழுப்புரம்

வளவனூர்

பஸ்களிடையே போட்டி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா எல்.என்.புரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரஜினிகாந்த்(வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய சகோதரியை விழுப்புரம் அருகே காங்கேயனூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரஜினிகாந்த் சகோதரியின் கணவரான அன்பரசன் ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது இளைய மகன் கவிசர்மா(5) என்பவனை ரஜினிகாந்த், தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் காங்கேயனூருக்கு சென்று கவிசர்மாவின் பொருட்களை எடுத்து வருவதற்காக மாலையில் பண்ருட்டியில் இருந்து சிறுவனை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ரஜினிகாந்த் காங்கேயனூர் புறப்பட்டார். விழுப்புரத்தை அடுத்த வாணியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது 2 தனியார் கல்லூரி பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக வந்தன.

சிறுவன் சாவு

இதில் ஒரு பஸ், ராங்ரூட்டில் ஏறும்போது ரஜினிகாந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரஜினிகாந்த், கவிசர்மா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிசர்மா பரிதாபமாக உயிரிழந்தான். ரஜினிகாந்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

சாலை மறியல்

விபத்து நடந்ததும் பஸ் டிரைவர்கள் 2 பேரும் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இதையறிந்ததும் ஆத்திரமடைந்த மக்கள் அங்கு திரண்டு வந்து 2 பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் வளவனூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story