தனியார் நிறுவன மேலாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு


தனியார் நிறுவன மேலாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன மேலாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு

கோயம்புத்தூர்

வடவள்ளி

கோவையில் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துச்சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் பறித்த திருநங்கை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவன மேலாளர்

கோவையை அடுத்த வடவள்ளியை சேர்ந்த 36 வயதானவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் ஓரின சேர்க்கைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் செல்போன் செயலி மூலம் நபர்களை தேர்வு செய்து அவர்களை வரவழைத்து அவர்களுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் அந்த மேலாளருக்கு வடவள்ளியை சேர்ந்த ரிஸ்வான் (வயது 21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

நிர்வாணமாக்கி வீடியோ

உடனே அந்த நபர் மேலாளருக்கு நாம் தனியாக வெளியே சென்று ஜாலியாக இருக்கலாம் என்று கூறி உள்ளார். அதன்படி அந்த மேலாளர் ரிஸ்வான் வரச்சொன்ன இடமான, கோவை வடவள்ளி அருகே ஒரு கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்குள்ளே சென்றார்.

அங்கிருந்த ரிஸ்வான், அவரை அந்த கட்டிடத்தின் 3-வது மாடிக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் அந்த பகுதியில் மறைந்து இருந்த அஜய் (20) என்பவர் மேலாளரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை நிர்வாணமாக்கி, தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர்.

ரூ.33 ஆயிரத்தை பறித்தனர்

அத்துடன் மேலாளரின் செல்போனை பறித்ததுடன், அதில் இருந்து கூகுள் பே மூலம் ரூ.3 ஆயிரத்தை திருநங்கையான அனுஸ்ரீ என்பவருக்கும், ரூ.30 ஆயிரத்தை அஜய்யின் தந்தையின் வங்கி கணக்குக்கும் அனுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து மேலாளரின் ஸ்கூட்டரின் சாவியை பிடுங்கிக்கொண்டு அதற்கான ஆர்.சி. புத்தகத்தையும் கேட்டு உள்ளனர்.

அதை கொடுக்காவிட்டால் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் அவர் ஆர்.சி.புத்தகம் தன்னிடம் இல்லை என்றும், தான் வேலை செய்து வரும் அலுவலகத்தின் அறையில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

3 பேர் கைது

அதை எடுத்துக்கொடுக்க அவரை மிரட்டி அழைத்துச்சென்றனர். இதையடுத்து 2 பேருடன் மேலாளர் தனது அலுவலகத்துக்கு சென்றார். ரிஸ்வான், அஜய் ஆகியோர் வெளியே நிற்க, மேலாளர் மட்டும் அலுவலகத்துக்குள் சென்றார். உடனே அவர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர்கள் வெளியே கும்பலாக வந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் தப்பிச்சென்றனர். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிஸ்வான், அஜய், திருநங்கையான அனுஸ்ரீ ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

---


Next Story