தனியார் வேலைவாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12- தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை,
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 12- தேதி நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.
முதல் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பயனடையலாம்
முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel-ல் இணைந்து பயன்பெறலாம்.
முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும், முகாமில் போட்டித்தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.