பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொந்தரவு கொடுத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொந்தரவு கொடுத்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (31). இவர்கள் 2 பேரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். அப்போது கிருஷ்ணன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதில், கிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த நிறுவனத்தில் இருந்து அப்பெண் வெளியேறி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து கிருஷ்ணனும் அவர் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து மாறி மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், கிருஷ்ணன், அந்த பெண்ணை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு செய்தும், தகாத வார்த்தையால் திட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து அப்பெண், கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி வழக்குப்பதிந்து, கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.