தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் சிகிச்சையளிக்க வேண்டும்
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் சிகிச்சையளிக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். தற்போது பரவிவரும் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் வருகையை பதிவு செய்துவிட்டு வெளியில் சென்று விடுவது போன்ற காரணங்களினால் பிரச்சினைகள் வருகிறது. இதனை அவ்வப்போது ஆய்வு செய்து பணியாளர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிகிச்சையளிக்க வேண்டும்
தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வருகிறது. தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் இதில் சிகிச்சை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் கழிவுநீர், குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிலுவையில் இருப்பதை உடனடியாக முடிக்க வேண்டும்.
இ-சேவை மையத்தில் தேவையற்ற நகல்கள் இணைக்கப்பட வேண்டும் என்று அலைகழிக்கப்பட்டு பொதுமக்களிடம் அதிகப்படியான பணம் வசூலிக்கப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை களைய அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
கடன் உதவி
முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை வங்கியின் வாயிலாக பயனாளிகளுக்கு வழங்கும் கடன் உதவிகளை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன், நகை கடன், மாற்றுத்திறனாளி கடன், டாம்கோ கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் அதிக கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்பு செயலாக்க திட்டங்கள், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதில் எவ்வித தொய்வும் இல்லாமல் இருப்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.