சரக்குவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பள்ளி மாணவர் சாவு
சரக்குவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
சமயபுரம்:
டியூஷன் சென்று திரும்பினர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கூத்தூர் காயத்ரி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் அருண்(வயது 17). இவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த ரவியின் மகன் நித்திசும்(16) பிளஸ்-2 படித்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மண்ணச்சநல்லூருக்கு டியூஷனுக்கு சென்றுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண் ஓட்ட பின்னால் நித்திஷ் அமர்ந்திருந்தார்.
சாவு
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியத்தில் சென்றபோது முன்னால் சென்ற சரக்குவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தில்லைநகரில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அருண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். நித்திசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
டிரைவர் கைது
இதையடுத்து அருணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே டியூஷன் சென்ற தங்களது மகன்களை எதிர்பார்த்து காத்திருந்த அவர்களது பெற்றோர்களுக்கு, விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். இதில் அருணினின் உடலை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது, காண்பவர்களின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவர் லால்குடி அருகே உள்ள முள்ளாள் பிரசன்னபுரி பகுதியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் அலெக்ஸ்(32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூஷனுக்கு சென்று திரும்பிய மாணவா் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.