நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை-கணவர் போலீசில் சரண்


நாமக்கல் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த அவரின் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

தனியார் பள்ளி ஆசிரியை

நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 42), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரமிளா (36). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.

பிரமிளா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் இருவரும் தூங்கி விட்டனர். அதிகாலை 4 மணி அளவில் எழுந்த ராஜா, மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

நடத்தையில் சந்தேகம்

இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரமிளாவின் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜா சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து உள்ளார். சமீபத்தில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பெருகி விட்டதால் டிராக்டரை விற்பனை செய்து விட்டு கூலிவேலைக்கு சென்று விட்டார் என கூறப்படுகிறது.

மேலும் பிரமிளா பட்டப்படிப்பு முடித்து உள்ள நிலையில், ராஜா படிக்கவில்லை என்பதால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் குடிபோதைக்கு அடிமையான ராஜா, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கணவர் போலீசில் சரண்

இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக கூறி நாமக்கல் போலீசில் ராஜா சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அவர் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

முன்னதாக கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த பிரமிளாவின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தனியார் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story