தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வால்பாறையில் தலைமை ஆசிரியரை கண்டித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வால்பாறை,
வால்பாறையில் தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ரீத்தம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என 47 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமை ஆசிரியை ரீத்தம்மாள் ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்துவது, சம்பள தொகையை சரியாக வழங்குவதில்லை உள்பட பல குற்றசாட்டுகள் எழுந்தது. மேலும் அவர் மாணவ-மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் மரியாதை குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தலைமை ஆசிரியையை சந்தித்து சம்பள நிலுவை தொகையை கேட்க சென்றனர். ஆனால் அவர்களை தலைமை ஆசிரியை ரீத்தம்மாள் உதாசினப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திடீரென பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், விரைந்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து தலைமை ஆசிரியை ரீத்தம்மாளை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.