கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனிவார்டு
கோவையில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை
கோவையில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல், வைரஸ் காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் பரவல் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 38 ஆயிரத்து 637 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் 2,618 ேபர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 63 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
வைரஸ் காய்ச்சல்
இதுதவிர இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
30 படுக்கைகளுடன் தனிவார்டு
வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவார்கள். மேலும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்புளூயன்சா தடுப்பூசிகளும் உள்ளன.
சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இன்புளூயன்சா வைரஸ் பரவல் உள்ளது. எனவே அங்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரவாமல் தடுக்க முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
இதுதவிர காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், மூச்சுவிட சிரமப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
இவ்வாறுஅவர் கூறினார்.
மருத்துவ முகாம்
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி மாவட்டம் முழுவதும் 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் டாக்டர்களின் பரிந்துரை இன்றி தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை பெற்று 3 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் முதல் 3 நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தனிமைப்படுத்துவதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.