"காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் சிக்கல்" - ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்


காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் சிக்கல் - ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
x

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்துவதில் சிரமம் உள்ளதாக ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் வீசி எறியப்படும் மதுபாட்டில்கள் வன உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை உருவாக்குகிறது. இதனால் மதுபானங்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த திட்டம் 10 மலைப்பிரதேசங்களில் அமலுக்கு வந்தன.

இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''மலைப்பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களில் 74 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில் 7 முதல் 8 டாஸ்மாக் கடைகள் மட்டுமே உள்ளதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவது எளிது. ஆனால் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஏனெனில் பார்களில் மது அருந்தும் நபர்களிடமிருந்து பாட்டில்களை திரும்பப்பெற்று விடலாம். ஆனால், மதுவை வீட்டுக்கு வாங்கி செல்பவர்களிடம் இருந்து பாட்டில்களை திரும்ப பெறுவது சிரமமானது. மாதம் 51 கோடி மதுபாட்டில்கள் விற்பனையாகிறது'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''இந்த 51 கோடி காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறாவிட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை சிந்திக்க வேண்டும்.

எனவே காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story