விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்
நாமக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல்லில் அண்ணா சாலை அருகே அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வக்கீல் நற்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பொறுப்பாளர் வக்கீல் நற்குமரன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலமானது நாமக்கல் அண்ணா சாலை அருகே தொடங்கி, பரமத்தி சாலை மற்றும் உழவர் சந்தை வழியாக பூங்கா சாலையில் சென்று முடிவுற்றது. ஊர்வலத்தில் கட்சியின் ஜனநாயகத்தை காப்போம் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகைகளை கட்சியினர் ஏந்தியவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் மாவட்ட பொருளாளர் அரசன் மற்றும் நிர்வாகிகள் கபிலன், பாலு, வைகறை செல்வன், குமணன், ஜூலி மரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.