சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஊர்வலம்

கூலி உயர்வு கேட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், கூலி உயர்வு கேட்டும், ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கங்கள் சார்பில் ஈரோடு பார்க் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுக்க முடிவு செய்தனர். ஆனால் போலீசார் பார்க் ரோட்டில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை மட்டுமே ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தனர்.
அதன்பேரில் பார்க் ரோட்டில் தொடங்கிய ஊர்வலத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார். சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் தலைவர் விஜயகுமார், கவுரவ தலைவர் ஆறுமுகம், தொ.மு.ச. பேரவை செயலாளர் கோபால், மாவட்ட தலைவர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.வும், சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளருமான கே.எஸ்.தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஊர்வலத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகள் குறித்து பேசினார். ஈரோடு பார்க் ரோட்டில் தொடங்கிய ஊர்வலம் எல்லை மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமையில் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்று, ஆர்.டி.ஓ. பிரேமலதாவிடம் கோரிக்கைகள் குறித்த மனுவை வழங்கினர்.