ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு வருகிற டிசம்பர் மாதம் 29-ந் தேதி வரையிலான காரிப் பருவ காலத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்பட உள்ளது.
இதில் பச்சை பயறு ஒரு கிலோ ரூ.77.55-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 354 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 420 டன் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பச்சை பயறு விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.