பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் பணி


பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் பணி
x
தினத்தந்தி 6 Jan 2023 7:30 PM GMT (Updated: 6 Jan 2023 7:30 PM GMT)

பூலாம்பட்டி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

சேலம்

எடப்பாடி:-

பூலாம்பட்டி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

கரும்பு கொள்முதல்

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 700 ஏக்கரில் செங்கரும்பு சாகுப்படி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கரும்பு கொள்முதல் செய்யப்படும் இடங்களில் ஒன்றான பூலாம்பட்டி பகுதியில் கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு என மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு முழு கரும்பு வழங்கிடும் வகையில் கரும்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. கரும்பின் தரம் குறித்து இதற்கான அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு கொள்முதல் செய்து வருகின்றனர். மாவட்டத்திற்கு தேவையான கரும்புகள் அனைத்தும் நமது மாவட்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வங்கி கணக்குகளில்.....

சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவையான கரும்புகளையும் இங்கிருந்து தொடர்புடைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவின் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். கரும்பு கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளுக்கு அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக கரும்புக்கு உரிய தொகை வழங்கப்படுகின்றது.

எனவே பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கரும்பு கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் இடைத்தரகர்கள் மற்றும் வேறு யாரையும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.

ஆய்வின்போது மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணை கூடுதல் பதிவாளர் சிவமலர், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ரவிக்குமார், இணை இயக்குனர் (வேளாண்மை) சிங்காரம், பூலாம்பட்டி பேரூராட்சி தலைவர் அழகுதுரை, தாசில்தார் லெனின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story