அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி -தமிழக அரசு உத்தரவு


அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி -தமிழக அரசு உத்தரவு
x

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1.68 கோடி சேலைகள் மற்றும் 1.63 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளையும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் பயனாளிகளுக்கு வழங்கும்படி அனுப்பியதைத் தொடர்ந்து, 7.4.2023 அன்று இந்த ஆண்டுக்கான திட்டம் நிறைவடைந்துவிட்டதாக தமிழக அரசுக்கு கைத்தறி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உரிய ஆணையை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்து மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்க அனுமதி வழங்குகிறது.

மீதமான 23 லட்சம் வேட்டி, சேலை

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொடர்ந்து உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள கொள்கை அளவிலான ஆணை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய வேட்டி, சேலைகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படாமல் 9 லட்சம் சேலைகள் மற்றும் 14 லட்சம் வேட்டிகள் கையிருப்பில் உள்ளன. அவை நீங்கலாக 1.68 கோடி சேலைகளையும், 1.63 கோடி வேட்டிகளையும் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்காக நிர்ணயம் செய்யலாம். தேவையின் அடிப்படையில் திருத்திய உற்பத்தி இலக்கை நிர்ணயம் செய்யலாம்.

விரல் ரேகை கட்டாயம்

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், இத்திட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டுள்ள கைத்தறிகள் மற்றும் பெடல்தறிகளின் முழு உற்பத்தி திறன்போக எஞ்சிய தேவையை விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்க வேண்டும்.

கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதற்காக 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, அடுத்து வரும் ஆண்டிற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான உத்தேச உற்பத்தி திட்டத்தை வழங்க கொள்கை அளவிலான ஆணை வழங்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய ரேஷன் கடைகளில் அவற்றை வழங்கும்போது, விற்பனை முனையத்தில் விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். பொது மக்களுக்கு வேட்டி, சேலையை வினியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story