பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய உயிரியல் காரணிகள் 40 டன் உற்பத்தி


பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய உயிரியல் காரணிகள் 40 டன் உற்பத்தி
x
தினத்தந்தி 2 Feb 2023 7:30 PM GMT (Updated: 2 Feb 2023 7:31 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் சார்பில் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய உயிரியல் காரணிகள் ஆண்டுக்கு 40 டன் உற்பத்தி செய்யப்படுவதாக வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.

உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்

நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஹரிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகம் குறைந்த விலையில் இடுப்பொருட்களை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிரை தாக்கக்கூடிய பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு எண்ணற்ற ரசாயன பூச்சி மருந்துகள் ரசாயன பூஞ்சான மருந்துகள் உள்ளன. இந்த ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மண்வளம் மனித இனம், கால்நடைகள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு பல பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

40 டன் உற்பத்தி

மேலும் பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளையும் அழித்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் செய்வதற்கான செலவும் அதிகமாகிறது. இதனால் உயிரியல் முறையில் ஒட்டுண்ணிகள், எதிர் உயிரி பாக்டீரியா, பூஞ்சாணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து, பூஞ்சான நோய்கள் மற்றும் பயிரை தாக்கக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்து வருகிறோம்.

குறிப்பாக இங்கு சூடோமோனாஸ் (பாக்டீரியா கொல்லி), டிரைக்கோடெர்மா விரிடி (பூஞ்சான கொல்லி), பிவேரியா பேசியானா (பூஞ்சானம்) ஆகிய உயிரியல் காரணிகளும், கரும்பு, நெல், பருத்தி மற்றும் காய்கறி ஆகியவற்றில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணி, டிரைக்கோகிரம்மா கைலோனிஸ், தென்னையில் வெள்ளை சுருள் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் கிரைசோபெர்லா இரைவிழுங்கி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் உயிரியல் காரணிகள், ஒட்டுண்ணி அட்டைகள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மட்டும் இன்றி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கோவை, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு ஆண்டுக்கு 35 முதல் 40 டன் வரை உயிரியல் காரணிகள் உற்பத்தி செய்து, அரசு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story