50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
ராசிபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராசிபுரம்
சொர்க்கவாசல் திறப்பு விழா
ராசிபுரம் டவுன் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராப்பத்து விரதம் இருந்து பரமபத வாசல் வழியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பொன் வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் ராசிபுரம் ஜன கல்யாண் இயக்கத்தினர் லட்டு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
50 ஆயிரம் லட்டுகள்
வழக்கம்போல் இந்த ஆண்டும் (32-ம் ஆண்டு) கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் லட்டுகளை பிரசாதமாக வழங்க ஜனகல்யான் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். லட்டுகள் தயாரிக்கும் பணி தனியார் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. லட்டுகள் தயாரிப்பதற்காக 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 1,000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ முந்திரி மற்றும் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை 5 கிலோ, திராட்சை 25 கிலோ உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு லட்டுகள் தயாரித்து வருகின்றனர்.
இந்த பணியில் 25-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை ஜன கல்யாண் இயக்க தலைவர் எஸ்.எம்.ஆர். பரந்தாமன், செயலாளர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.