சிறு நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்கியது


சிறு நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 23 July 2023 12:30 AM IST (Updated: 23 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிறு நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்கியது

கோயம்புத்தூர்

கோவை

வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து சிறு நூற்பாலைகளில் நேற்று முதல் நூல் உற்பத்தி தொடங்கியது.

வேலை நிறுத்தம் வாபஸ்

மின்கட்டண உயர்வு, பஞ்சு விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிறு நூற்பாலைகள், ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. கோவை மாவட்டத்தில் 500 சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தினமும் ரூ.90 கோடி மதிப்புக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்தி, அன்பரசன் ஆகியோர் தலைமையில் நூற்பாலைகளின் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தென்இந்திய மில்கள் சங்கம், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு, மறு சுழற்சி ஜவுளி தொழில் கூட்டமைப்பு, ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம், சிஸ்பா உள்ளிட்ட பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று உற்பத்தி நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

சிறப்பு நிதி உதவி திட்டம்

இந்திய ஜவுளி தொழில்முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறும்போது, மற்ற மாநிலங்களில் அதிக சலுகைகள் வழங்கப்படுவதால், தமிழக நூற்பாலைகளில் போட்டி திறன் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கினோம். அரசு தரப்பில் சிறப்பு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

சைமா பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறும்போது, "குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதால், புதிதாக அங்கு ஜவுளி தொழில்கள் தொடங்கப்படுகின்றன. தமிழகத்தில் மின் கட்டண சலுகை கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் தெரிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

உற்பத்தி தொடங்கியது

ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க தலைவர் அருள் மொழி கூறும்போது, மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்களின் வாக்குறுதியை ஏற்று உற்பத்தி நிறுத்த போராட்டத்தை விலக்கி கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

சிறுநூற்பாலைகள் சங்க நிர்வாகி செல்வம் கூறும்போது, "தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று நேற்று முதல் சிறு நூற்பாலைகளில் உற்பத்தி தொடங்கி உள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 500 மில்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.


Next Story