பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
வடவள்ளி
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், ஒரு பேராசிரியருக்கு ஒரு கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்க வேண்டும், ரூசா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கருவிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும், தொலைதூர கல்வி மையத்தின் வரவு-செலவு கணக்குகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பேராசிரியர் வசந்த் முன்னிலை வகித்தார். போராட்டம் குறித்து பேராசிரியர்கள் கூறும்போது, எங்களது கோரிக்கைகள் குறித்து பலமுறை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.
இதை அறிந்த துணை வேந்தர் காளிராஜ் விரைந்து வந்து, பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், உங்களது கோரிக்கைகள் குறித்து சிண்டிகேட் உறுப்பினர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று பேராசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.