120 ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் நிகழ்ச்சி


120 ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் நிகழ்ச்சி
x

துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் நிகழ்ச்சியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் நிகழ்ச்சியை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

ஆமைக்குஞ்சுகள்

குமரி மாவட்ட வனத்துறையின் சார்பில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் அருகில் உள்ள துவாரகாபதி கடற்கரை பகுதியில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரையை தூய்மை படுத்தும் பணி ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அதிகாரி இளையராஜா முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியையும், கடற்கரையை தூய்மை படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீன்வளம் பெருகும்

துவாரகாபதியில் அமைந்துள்ள கடற்கரையில் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் கடல் ஆமை முட்டைகள் பொரிப்பகத்தின் மூலம் கடற்கரை மணலில் ஆமைகள் இடும் முட்டைகள் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிப்பதற்கு, அதனின் தட்பவெப்ப நிலையினை சோதித்து அறிந்து அதற்கேற்றவாறு மணலில் குழிகள் அமைத்து ஆமை முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை தேதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.

முட்டைகள் பொரிக்க வசதிகள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 5993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் 3708 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 9491 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் தற்போது வரை 1673 ஆமை குஞ்சுகள் பொரித்து, கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விடுவதால் மீன்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்வதோடு. கடல் நீரை தூய்மைப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும். அதன்படி சேகரித்து வைக்கப்பட்ட ஆமை முட்டைகளில் பொரித்து வெளி வந்த 120 ஆமை குஞ்சுகளை இன்றையதினம்(நேற்று) கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கையேடு வெளியீடு

முன்னதாக வனத்துறையினரால் வெளியிடப்பட்ட கையேட்டை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், மாணவ -மாணவிகளுக்கு வழங்கியதோடு, வனத்துறையினர் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆமை மணற் சிற்பத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கலெக்டர் கடற்கரையில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் (பயிற்சி) குணால் யாதவ், (பயிற்சி-கேரளா) சுகாஷ் காடே, வனச்சரகர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story