குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமத்துக்கு 6 மாதங்கள் தடை


குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமத்துக்கு 6 மாதங்கள் தடை
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:49 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட நபரின் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் மற்றும் போலீசார் பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பாகவும், பொது இடங்களிலும் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள், குறிப்பாக உரிய ஓட்டுனர் உரிமம் இன்றியும், தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் (பதிவுச்சான்று, காப்பீட்டு சான்று, புகைச்சான்று நடப்பில் இல்லாதது) இருவருக்கு மேல் பயணித்து வருபவர்களையும் கண்காணித்து தணிக்கை செய்து மோட்டார் வாகன சட்டவிதிகளின்படி உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தால் ரூ.1,000, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், 18 வயது பூர்த்தியடையாமல் உரிய ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

6 மாதங்கள் தற்காலிக தடை

உரிய ஓட்டுனர் உரிமம் இன்றியும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சிறார்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக வாகனத்தை சிறைபிடித்து நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு ஓட்டுனர் உரிமம் 6 மாதங்கள் தற்காலிக தடை மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்ஞை மீறுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களில் ஏற்றிச் செல்லுதல் போன்ற குற்றங்களுக்காக ஓட்டுனர் உரிமம் 3 மாதங்கள் தற்காலிக தடை விதிக்க வேண்டும்.

எனவே மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர் மோட்டார் வாகன சட்டவிதிகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கும், போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பெருமளவில் குறைக்க உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இக்கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story