ஆவின் பணியாளர்கள் பதவி உயர்வு பட்டியலுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஆவின் பணியாளர்கள் பதவி உயர்வு பட்டியலுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை ஆவினில் பிளம்பராக பணியாற்றுகிறேன். இதே பிரிவில் வெல்டர் உள்ளிட்ட ேவறு சில பணி நிலைகள் உள்ளன. இந்த பிரிவில் இருந்து அடுத்த நிலையான நிர்வாகி ஆக பதவி உயர்வு பெற முடியும்.
தமிழ்நாடு முழுவதும் 47 பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க 75 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றாமல் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி பட்டியல் தயாரித்து எனக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மேற்கண்ட பதவி உயர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து ஆவின் நிர்வாக அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.