அனைத்து அரசு பள்ளிகளிலும்'எங்கள் பள்ளி- மிளிரும் பள்ளி' திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


அனைத்து அரசு பள்ளிகளிலும்எங்கள் பள்ளி- மிளிரும் பள்ளி திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Sep 2023 7:30 PM GMT (Updated: 4 Sep 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி-மிளிரும் பள்ளி திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

எங்கள் பள்ளி- மிளிரும் பள்ளி

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 37,574 பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி "எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் தொடக்க விழா இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

விழிப்புணர்வு

"எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி" என்ற செயல்திட்டத்தின் நோக்கம் பள்ளி வயது குழந்தைகள் பள்ளிப் பருவத்திலே சுத்தமான பள்ளி வளாகம் மற்றும் தன்சுத்தம், உடல்நலம், கழிவு பிரிப்பு மற்றும் நெகிழி இல்லா வளாகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் மாணவர்கள் தன்சுத்தம் மற்றும் கைகழுவுதல் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் வட்டார அளவிலான குழுக்களும் அமைக்கப்பட உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்களின் அருகாமையில் உள்ள குளம், ஆறு மற்றும் நீர்நிலைகளுக்கு அழைத்து சென்று இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

மரக்கன்றுகள்

தொண்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கேற்க செய்தல், 20 மரக்கன்றுகள் பள்ளியில் நடப்படுதல், திடக்கழிவு மேலாண்மைக்கு 2 குப்பைத் (குழிகள்) தொட்டிகள் அமைத்தல்,

பள்ளி வளாகத்தில் காய்கறித்தோட்டம், மூலிகைத்தோட்டம் நடுவதற்கு நிலத்தைப் பயன்படுத்துதல், சமூகத்தின் ஒத்துழைப்பிற்கு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்துதல் செயல்பாடுகள் தேவையற்ற பொருட்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுதல் உள்ளடக்கிய விழிப்புணர்வு செயல்பாடுகளை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற "எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி" விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் விஜயகுமார், மான்விழி, இளங்கோ, ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், சம்பத்குமார், சுற்றுசூழல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துரைராஜ், சுரேஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story