இளைஞர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்த நான் முதல்வன் திட்டம்


இளைஞர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்த நான் முதல்வன் திட்டம்
x

இளைஞர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்தி உயர்த்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரியில் அமைச்சர் காந்தி கூறினார்.

கிருஷ்ணகிரி

கல்லூரி கனவு நிகழ்ச்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரி கனவு என்னும் புத்தக கையேட்டை அவர் மாணவிகளுக்கு வழங்கினார்.

விழாவில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

வழிகாட்டும் நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேற்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பது பற்றியெல்லாம் நீங்கள் இணையத்தை பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை இப்போது வந்திருக்கிறது. இருந்தாலும், உங்கள் மதிப்பெண் அடிப்படையில் எந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம், எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை எடுத்துக்கூறி உங்களுக்கு வழிகாட்டுவதற்கான வாய்ப்புதான் இந்த நிகழ்ச்சி.

நீங்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தோடு, எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம்தான், நான் முதல்வன் என்கிற இந்த திட்டம். தமிழக இளைஞர்கள், மாணவர்களை நல்வழிப்படுத்தி உயர்த்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடையவே இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உட்கட்டமைப்பு வசதிகள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறையில் உயர் அதிகாரிகளாக கோலோச்சி கொண்டிருக்கிறார்கள். ஆகவே அரசு பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். கல்லூரி காலத்தில் மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் இருப்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில், நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாளும், படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, நீங்கள் கல்லூரியில் அடியெடுத்து வைப்பதற்கு காரணமான உங்கள் பெற்றோரின் கனவை புரிந்துகொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டி அரங்குகளை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்ரி கடலரசுமூர்த்தி, தலைமை ஆசிரியர் மகேந்திரன், தாசில்தார் நீலமேகம், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுகா குந்தப்பள்ளியில் மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே ரூ.3.33 கோடி மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.


Next Story