பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நாளை அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்


பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில்  நாளை அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம்
x

நெல்லை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை கொடுப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்குகின்ற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கே வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அனைத்து கிராம அண்ணா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பாளையங்கோட்டை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் மேலூர் சமுதாய நலக்கூடத்திலும், மானூர் யூனியனில் வெள்ளப்பனேரி ஊராட்சியில் கிராம சேவை மையத்திலும், பாப்பாக்குடி யூனியன் கோடகநல்லூர் ஊராட்சி சமூக நலக்கூடத்திலும், அம்பை யூனியன் வாகைகுளம் ஊராட்சி சமூக நலக்கூடத்திலும், நாங்குநேரி யூனியனில் தளபதி சமுத்திரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், சங்கனான்குளம் ஊராட்சியில் அங்குள்ள சமுதாய நலக்கூடத்திலும், வள்ளியூர் யூனியன் பழவூர் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகத்திலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் நடைபெறுகிறது.

அடிப்படை வசதி

இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், சாதி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, நில தவாக்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.

முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் துறையில் மற்றும் இதர துறையில் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story