நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த வாழை ரகத்தை உருவாக்க திட்டம்
நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த வாழை ரகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
6 புதிய வகை வாழைகள் அறிமுகம்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 30-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மையத்தின் முதன்மை விஞ்ஞானி கற்பகம் வரவேற்றார். விழாவிற்கு மையத்தின் இயக்குனர் ஆர்.செல்வராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாழை உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதலில் செயற்கை நுண்ணறிவு பற்றிய புதிய பார்வையில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த மையம் ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கியை பராமரித்து வருகிறது. இங்கு 510 வகையான வாழை ரகங்களை பாதுகாத்து வருகிறோம்.
கடந்த ஆண்டுகளில் இந்த மையம் 60 தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. 6 புதிய வகை வாழைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோய் கண்டறிதல் மற்றும் துளசி விதை கலந்த வாழைப்பழச் சாறுக்கான 2 காப்புரிமைகளை பெற்றுள்ளது.
விவசாய டிரோன்கள்
இந்த ஆண்டு மரபணு திருத்தம் மூலமாக வாழை வாடல் நோய் மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி வாய்ந்த கேவண்டிஸ்ட் வாழை ரகத்தை உருவாக்கக்கூடிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள ஆராய்ச்சி திட்டங்களை பெற்றுள்ளோம். இந்த மையத்தில் 146 திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் 7 ஆயிரம் விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் பயனடைந்து உள்ளனர், என்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் பழனிமுத்து கலந்து கொண்டு பேசுகையில், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க மதிப்புக் கூட்டல் ஆகியவற்றில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் அழகுசுந்தரம், பெங்களூரு வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விருதுகள்
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பங்குதாரர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, சிறந்த வாழை விவசாயிகள், சிறந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சிறந்த தொழில்நுட்பப்பரப்புதல், சிறந்த வேளாண் அறிவியல் மையங்கள், சிறந்த தொழில்முனைவோர் மற்றும் சிறந்த தொழில்நுட்ப பணியாளர்கள் 14 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் புத்தக மற்றும் இதழ் வெளியீடு, கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30 வேளாண் கண்காட்சி அரங்குகள் இடம்பெற்றிருந்தன. முடிவில் முதன்மை விஞ்ஞானி மயில்வாகனன் நன்றி கூறினார்