நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்


நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம்-பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2023 1:00 AM IST (Updated: 24 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.30 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி

நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, ஊட்டி எச்.பி.எப். பகுதியில் கோல்ப் மைதான சாலைக்கும், கூடலூர் சாலைக்கும் இடையே வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலமும், அருகில் கால்நடைத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரூ.447 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.

மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் ஊட்டியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. உடல் கூறியல் பிரிவு, உடலியல் பிரிவு, நூலகப் பிரிவு, நோயியல் பிரிவு கட்டப்படுகிறது. அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல், உயர் தொழில்நுட்ப பரிசோதனை மையம் போன்ற சிறப்பு சிகிச்சை மையங்கள் இடம் பெறுகிறது. மேலும் முதல்வர் குடியிருப்பு, செவிலியர் குடியிருப்பு, மாணவ-மாணவிகள் விடுதி போன்ற குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

3-வது ஆண்டு மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டது. இதில் நீலகிரி தவிர திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், அரியலூர் உள்பட எல்லா மாவட்டங்களிலும் பணிகள் முடிந்து விட்டது. ஆனால் நீலகிரி, மலை மாவட்டம் என்பதாலும், 21 அடி உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக் கூடாது என்ற விதிமுறை காரணத்தாலும் தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மாதத்திற்குள் மருத்துவ கல்லூரி பணிகள் முடிக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆனாலும் தற்போது மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் பிரதான சாலை, தற்போது புதிதாக கட்டப்படும் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடையில் செல்கிறது. இந்த சாலையில் ஒரு நாளைக்கு 1000- க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் என்பதால், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தவுடன் இருபுறமும் தினசரி சாலையை கடப்பது சவாலான விஷயமாக இருக்கும் என்பதால் அந்த சாலை மீது உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் அய்யாசாமி கூறியதாவது:-

ரூ.30 கோடியில் பாலம் கட்ட திட்டம்

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் எச்.பி.எப். பகுதியில் இடதுபுறத்தில் அரசு ஆஸ்பத்திரியும் வலது புறத்தில் குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களும் இருக்கிறது. இடதுபுறம் அரசு ஆஸ்பத்திரி உள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது. அங்கு நமக்கு 25 ஆண்டு கால குத்தகைக்கு மட்டும் தான் இடம் கிடைத்துள்ளது. அந்த இடத்தில் இருந்து எதிர்புறம் உள்ள குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு செல்ல 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். மேலும் தினசரி அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் என்பதால், ரூ.30 கோடி செலவில் 400 மீட்டர் தூரம் மற்றும் 11 மீட்டர் உயரத்தில் கூடலூர் சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது.ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு நெடுஞ்சாலை துறை மூலம் விரைவில் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story