கச்சிராயப்பாளையம்-கல்வராயன்மலை சாலையை இரு வழி சாலையாக மாற்ற திட்டம்


கச்சிராயப்பாளையம்-கல்வராயன்மலை சாலையை இரு வழி சாலையாக மாற்ற திட்டம்
x

கச்சிராயப்பாளையம்-கல்வராயன்மலை சாலையை இரு வழி சாலையாக மாற்ற திட்டம் மலைவாழ்மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். தனி வருவாய் வட்டமாக உள்ள கல்வராயன்மலை ஏழைகளின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு 5-க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் படகு குழாம், சிறுவர் பூங்கா ஆகிய பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்து காணப்படுவதால் இங்கு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். கல்வராயன்மலைக்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் கச்சிராயப்பாளையத்தில் இருந்து செல்லும் ஒருவழி சாலையை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கீழ்பரிகம் கிராமத்தில் இருந்து வெள்ளி மலைவரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒரு வழி சாலையை இரு வழிசாலையாக மாற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகளும், மலைவாழ் மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கச்சிராயப்பாளையம்-கல்வராயன்மலை ஒருவழிச்சாலையை இரு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் திட்ட அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக பல்வேறு இடங்களில் மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் கல்வராயன்மலை வெள்ளிமலையில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லக்கூடிய பாதையில் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் சேதம் அடைந்து இருப்பதால் அதற்கு பதிலாக புதிய மேம்பாலம் கட்டவும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story