15 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம்
சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சர்க்கரைத்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தார்
சேத்தியாத்தோப்பு
கூடுதல் மின் உற்பத்தி
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட கூடுதல் மின் உற்பத்தி திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, தமிழக வேளாண்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முயற்சியால் மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டு சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தலைமை பொறியாளர் ஆய்வு
இந்த நிலையில் சென்னை சர்க்கரைத்துறை ஆணையர் விஜயகுமார் உத்தரவின் பேரில், சர்க்கரைத்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன் நேற்று சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூடுதல் மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருகிற 2023-2024-ம் அரவை பருவத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தை கொண்டு வருது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்த அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சர்க்கரை ஆலையின் தலைமை பொறியாளர் ராம்குமார், தலைமை ரசாயனர் செல்வேந்திரன், தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன், பொறியாளர்கள் முருகன், மில்வின் ஜோசப், பாரதிராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.