தமிழகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்


தமிழகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்
x

திட்டம் Project

திருச்சி

திருச்சி, மே.21-

தமிழகத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தூர்வாரும் பணி ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மறறும் வடிகால்களை முதல்-அமைச்சர் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்கு ரூ.18 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உய்யகொண்டான் வாய்க்கால், குடமுருட்டி ஆறு, கொடிங்கால்வாரி, நந்தியாறு, பங்குனி வாய்க்கால், சோழகம்பட்டி வாரி, ஆனந்தகாவேரி, கோரையாறு, அரியாறு போன்ற மிக முக்கியமான வாய்க்கால் மற்றும் மழை வடிநீர் வாய்க்கால்கள் என மொத்தம் 90 பணிகள், 232.59 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியம் புங்கனூரில் அரியாறு, கருமண்டபம் பகுதியில் கோரையாறு, வயலூர் சாலையில் உய்யகொண்டான் பாலம் மற்றும் பாத்திமாநகர் பகுதியில் குடமுருட்டி ஆறு மற்றும் கம்பரசம்பேட்டை பகுதியில் கொடிங்கால் வாரி ஆகியவற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ள பாதுகாப்பு

ஆறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய அளவீடுகளின்படி தூர்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு அனைத்து பணிகளையும் வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். மேலும், தூர்வாரும் பணிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள உழவர் குழுக்களுடன் பணிகள் பற்றியும், விவசாயிகளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இந்த பணிகள் நிறைவு பெறும்போது, திருச்சி மாநகரம், லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு ஆகிய வட்டங்கள் முழுமையாக பயன்பெறும் என்றும், திருச்சி மாவட்டம் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆய்வின்போது, அரசு முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன், கலெக்டர் சிவராசு, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டைசெல்லம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

குப்பையில் இருந்து மின்சாரம்

தமிழ்நாடு முழுவதும் குப்பைகள் சேருகிற இடத்தில் இருந்தே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்காத குப்பைகளை எடுத்து கொண்டு மின்சாரம் தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். இந்தியாவிலேயே இந்தூர் நகரத்தில் தான் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அங்கு எவ்வாறு இந்த பணியை செய்கிறார்கள் என பார்ப்பதற்காக இந்த துறையின் செயலாளர் இந்தூர் சென்று இருக்கிறார். அதனை முன்மாதிரியாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்படும். இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க வாய்க்கால் கரையோரங்களில் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story