ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க திட்டம்


ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2023 2:00 AM IST (Updated: 9 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க ரெயில்வே அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ரெயில் கண்டெய்னர் முனையம்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக் கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதை சார்ந்து தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. இங்கிருந்து தென்னைநார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக தூத்துக்குடி, கொச்சி, சென்னை போன்ற துறைமுகங் களுக்கு பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கப்பலில் கண்டெய்னர் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு லாரியில் பொருட்களை கொண்டு செல்கின்றனர்.

திப்பம்பட்டியில் அமைகிறது

இதனால் போக்குவரத்து செலவு, காலதாமதம் ஆகிறது. எனவே பொள்ளாச்சி பகுதியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி- திண்டுக்கல் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் ஏற்கனவே திப்பம்பட்டியில் ரெயில் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது அங்கு ரெயில் நிலையம் இல்லை. இதற்கிடையே தென்னை நார் உற்பத்தியாளர்கள் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனவே திப்பம்பட்டியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அங்கு என்ஜினீயரிங், வணிகம், எலக்ட்ரிக் உள்ளிட்ட அனைத்து துறைகளை கொண்ட ரெயில்வே அதிகாரிகள் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர்.

கூடுதல் நிலம்

அதில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க 720 மீட்டர் இடம் தேவை என்று தெரியவந்தது. ஆனால் அங்கு தற்போது 570 மீட்டர் இடம் தான் உள்ளது. எனவே தனியார் பங்களிப்பு அல்லது மாநில அரசு கூடுதலாக நிலம் வழங்கினால் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்வே கண்டெய்னர் முனையம் அமைப்பதன் மூலம் திப்பம்பட்டியில் ரெயில் நிலையம் மீண்டும் அமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து தென்னைநார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் அன்னியச் செலாவணி கிடைக்கிறது. ஆனால் தென்னை நார் பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. லாரிகள் மூலம் பொருட்களை தூத்துக்குடி, கொச்சி, சென்னை துறைமுகங்களுக்கு கொண்டு சென்று கப்பலில் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளது.


ஆவணங்கள் சரிபார்ப்பு


இந்த நிலையில் பொள்ளாச்சியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைந்தால் தென்னை நார் பொருட்களை ஏற்றி, துறைமுகங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும்.

வெளி மாநிலங்களுக்கும் ரெயில் மூலம் பொருட்களை கொண்டு செல்வது எளிதாக இருக்கும். லாரியில் கொண்டு சென்று கண்டெய்னரில் ஏற்றுவதற்கு தனி யாக ஆட்களை நியமிக்க வேண்டும்.

மேலும் ஆவணங்களை சரி பார்ப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. பொள் ளாச்சியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைந்தால் போக்குவரத்து செலவு குறைவு, காலதாமதம் இல்லாமல் விரை வாக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

ஆவணங்களை நேரடியாக இங்கிருந்து சரிபார்க்க முடியும். எனவே பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் ரெயில் கண்டெய்னர் முனையம் அமைக்க மாநில அரசு உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story