கடல்நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்க 1,000 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்


கடல்நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்க 1,000 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்
x

கடல்நீரில் மூழ்கி தவிப்பவர்களை காக்க 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரை பகுதிகள் இருக்கிறது. இதில் உள்ள 608 மீனவ கிராமங்களில் 10 லட்சத்து 48 ஆயிரம் மீனவர்கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரை பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பொழு போக்கிற்காக வந்து செல்கின்றனர்.

கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளை குறைப்பதற்கும், கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையில் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த பயிற்சி தேசிய மீனவள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ.53 லட்சம் மதிப்பிடில் ஐ.டி.யு.எஸ். ஸ்போர்ட்ஸ் அண்ட் சேப்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் தமிழகத்தில் 14 மாவட்டங்களை சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஜி.செல்வம் எம்.பி., எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தெ.சு.ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஐ.டி.யு.எஸ். ஸ்போர்ட்ஸ் அண்ட் சேப்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அன்கிட் வக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறன்களை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story