ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்


ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 3:45 AM IST (Updated: 19 May 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நீலகிரி

ஊட்டி

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களை பாரம்பரியம் மாறாமல் மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நவீன வசதிகள்

நாடு முழுவதும் அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் 1,275 ரெயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன்படி ரெயில் நிலையத்தில் அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி, இலவச வைபை வசதி, காத்திருப்போர் அறை, கழிப்பிட மேம்பாடு, சுகாதாரம், ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் உள்பட சுமார் 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

காத்திருப்போர் அறை

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் ரூ.15 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. 2 கட்டங்களாக பணிகள் நடக்க உள்ளது. டெண்டர் விடுதல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் முதல் கட்டமாக இந்த ஆண்டு முடிக்கப்படும். கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்.

இதன்படி ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் நுழைவுவாயில், வெளியேறும் வாயில் என தனி, தனி பகுதிகள் கட்டப்பட உள்ளது. ரெயில் நிலையம் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். பயணிகள் காத்திருப்போர் அறை மாற்றப்பட்டு அங்கு தொலைக்காட்சி பொருத்தப்படும்.

பாரம்பரியம் மாறாமல்...

ஊட்டி மலை ரெயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகாரம் பெற்று உள்ளதால், மற்ற ரெயில் நிலையங்களை போல் இல்லாமல் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் பாரம்பரியம் மாறாமல் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது கூடுதல் சிறப்பு அம்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலையத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சுற்றுலா தகவல் மையம் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story