ரூ.2¾ கோடி மதிப்பில் திட்டப்பணிகள்


ரூ.2¾ கோடி மதிப்பில் திட்டப்பணிகள்
x

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழா

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காரிமங்கலம் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் 80 திறந்தவெளி கடைகள் கட்டுதல், ஆண் மற்றும் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம் கட்டுதல், 322 மீட்டர் சுற்றுச்சுவர் கட்டுதல், 200 மீட்டர் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் புதிய உழவர் சந்தைக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் காரிமங்கலம் பேரூராட்சிக்கு புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் வருவாய்த்துறை மற்றும் சமூகநலத்துறையின் சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது:-

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் புதிய உழவர் சந்தை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காரிமங்கலத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காரிமங்கலம் வட்டாரத்தில் 5 ஆயிரத்து 811 ஹெக்ேடர் பரப்பளவில் பயிரிடப்படும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்யவும், நுகர்வோர்கள் வாங்கி பயன்பெறவும் இந்த உழவர் சந்தை அமைக்கபட உள்ளது. இந்த உழவர் சந்தையில் உழவர் சந்தை அலுவலகம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான சிறப்பு அங்காடி, விவசாயிகளுக்கான கடைகள், கழிவறை வசதிகள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சி துணைத்தலைவர் கே.வி.கே.சீனிவாசன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, தாசில்தார் சுகுமாரன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story