வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்
பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
பண்ருட்டி,
அபிஷேகம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காலை 7 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழாவையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் வெவ்வேறு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற இருக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 11-ந் தேதி தேரோட்டமும், 12-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் ஸ்ரீதேவி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.