ஒரே அரசாணையின் மூலம் வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு


ஒரே அரசாணையின் மூலம் வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு
x

ஒரே அரசாணையின் மூலம் வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வணிகவரித்துறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு கூடுதலான மனித வளங்களை களப்பணிக்கு அளிக்கவும், புலனாய்வு மற்றும் தணிக்கை பிரிவுகளை வலுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த 2021-22-ம் ஆண்டின் தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ஆயிரம் உதவி அலுவலர் பணியிடங்களை மேம்படுத்த கொள்கை அளவில் 19.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வணிகவரிகள் ஆணையர் முன்மொழிவை அனுப்பியுள்ளார்.

நவீன தொழில்நுட்பம்

அதில், தமிழ்நாடு ஜி.எஸ்.டி. விதிகளின் கீழ், குறைவான நிலை அலுவலர்களை துணை வணிகவரி அதிகாரிகள் நியமித்து உள்ளனர். உதவி நிலையில் உள்ள அந்த அலுவலர்களை துணை வணிகவரி அதிகாரிகள் நிலைக்கு உயர்த்தினால், கண்காணிப்பு, வரி தாக்கல், கட்டணத்தை திருப்பி செலுத்துதல், ஆய்வு, தணிக்கை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய அதிகாரிகள் கிடைப்பார்கள்.

மனிதவள குறைபாடு இருப்பதால், ரோந்துப்பணி படைகளுக்கு வேறு பிரிவில் இருந்து ஆட்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. புதிய சட்டமாக இருப்பதால் அதை கையாள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

ரோந்துப்படை எண்ணிக்கை

வரி எய்ப்பை தடுப்பதற்கு தக்கபடி அதிகாரிகளின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். எனவே, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரோந்துப் படையின் எண்ணிக்கையை 100-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வணிக வரி அதிகாரிகள், ரோந்துப் படைகளுக்கு தலைமை தாங்குகின்றனர். அதன் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நிலையில் வணிக வரி அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதற்கேற்றபடி உயர்த்தப்பட வேண்டும்.

புலனாய்வு பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்தில் சுற்றும் படை எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரி செலுத்தாமல் கொண்டு செல்லப்படும் சரக்குகளை கண்டறிய இது அவசியமாக உள்ளது.

தேவைக்கு ஏற்ப...

மேலும், ஒவ்வொரு எல்லைப் பகுதியிலும் தணிக்கை பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது, மாநிலத்திற்கு அதிக வரி வருவாயை வசூலித்து அளிக்க உதவிகரமாக இருக்கும். அதன்படி, 60 பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

எனவே ஆயிரம் உதவி அலுவலர்களை (மொத்த எண்ணிக்கை 2,138), 840 துணை வணிகவரி அதிகாரிகள் மற்றும் 160 வணிகவரி அதிகாரிகள் என்ற அளவில் நிலை உயர்வு செய்ய வேண்டும் என்று தனது முன்மொழிவில் வணிகவரிகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரி நிர்வாகம் மேம்படுத்தப்படுவதோடு அரசுக்கு வரும் வரி வருவாயின் அளவு உயரும். அவர்களை ரோந்துப்படை, புலனாய்வுப் பிரிவு மற்றும் தணிக்கைப் பிரிவில் தேவைக்கு ஏற்ப நியமனம் செய்ய முடியும். இதை நேரடி மற்றும் பணியிடமாற்றம் மூலம் மேற்கொள்ள முடியும். துறை ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் இந்த நியமனங்களை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பதவி உயர்வு

அவரது முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்து உதவி அலுவலர்கள் ஆயிரம் பேரில், 840 பேரை துணை வணிக அதிகாரிகளாகவும், 160 பேரை வணிகவரி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story