சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு உடனடி தீர்வு-விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு


சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு உடனடி தீர்வு-விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு
x

சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 141 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

சேலம்

மக்கள் நீதிமன்றம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டிலும், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், விபத்து, சிவில், காசோலை, குடும்ப நலம், உரிமையியல் உள்பட 271 வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. சேலம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சார்பு நீதிபதி தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை முடித்துக்கொண்டனர்.

ரூ.80 லட்சம் இழப்பீடு

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மணிராஜன் (வயது 33) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி புதுக்கோட்டையில் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் தலையில் அடிபட்டு கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டன.

இது குறித்து மணிராஜனின் குடும்பத்தினர் சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் அந்த வழக்கு நேற்று சமரசத்திற்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மணிராஜனுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

141 வழக்குகளுக்கு தீர்வு

இதேபோல், கடந்த 2021-ம் ஆண்டு குரு என்பவர் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆட்டோ மோதியதில் காலில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு ரூ.23 லட்சத்துக்கான இழப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு செல்வம் என்பவர் மேட்டூர் மால்கோ நிறுவனத்தின் லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றபோது பாம்பு கடித்தது.

இந்த வழக்கில் சமரசம் செய்து அவருக்கு காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. நேற்று ஒரேநாளில் நடந்த 3 வழக்குகளில் மட்டும் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 271 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் 141 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.9 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 65-க்கு பைசல் செய்யப்பட்டுள்ளது.

பிரிந்து வாழ்ந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தனர்

மேட்டூரில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான முத்துராமன் தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், சமரசத்திற்கு எடுத்துக்கொண்ட 59 வழக்குகளில் 23 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணன் பிரபு என்பவர் திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆனநிலையில் அவரது மனைவி விஜயராணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு அளிந்திருந்தார். இதையடுத்து மக்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கையால் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். பின்னர் இருவரும் ஜோடியாக தங்களது வீட்டிற்கு சென்றனர்.


Next Story