காப்பீடு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார் பேச்சு


காப்பீடு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்; சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார் பேச்சு
x

காப்பீடு வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார் கூறினார்.

திருச்சி

சிறப்பு நீதிமன்றம்

மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. மேலும் 2-வது சிறப்பு நீதிமன்றத்தை நேற்று காலை திருச்சி கோர்ட்டு வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பான நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தலைமை தாங்கினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார்.

விரைந்து முடிக்க வேண்டும்

பின்னர் ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல் குமார் பேசுகையில் 'நீதிமன்றத்தில் நடத்தப்படும் காப்பீடு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கப்படும் பண உதவி தேவைப்படும் போது, இதுபோன்ற வழக்குகளுக்கு விரைவான நீதி வழங்கப்பட வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் காலதாமதத்தால் நீதிமன்ற உத்தரவுகளை மீறி பலர் மீண்டும் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

எனவே மனுதாரர்கள் கைக்கு பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் நியாயமான கட்டணம் வசூலிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். அவர்கள் பெறும் தொகையில் இருந்து சதவீத பங்கின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. பணத்தை பெறும் பலர் அந்த பணத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கும் என்பதால், இது ஒரு தவறான முன்னுதாரணத்தை அமைக்கும்' என்றார்.

நீதிக்கு உற்ற துணை

அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் 'திருச்சியில் வக்கீல்களுக்கு ஒரு சேம்பர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது இந்த ஆண்டிலேயே நிறைவேற்றி தரப்படும். அதேபோன்று 138 ஆண்டுகள் பழமையான திருச்சி நீதிமன்ற கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கும், சாலை அமைத்து தருவதற்கும் இந்த ஆண்டிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டியத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் லால்குடி மற்றும் ஸ்ரீரங்கத்தில் அமைக்கப்பட உள்ள நீதிமன்றங்களுக்கு தேவையான நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் ஆளுங்கட்சியிலும் இருந்திருக்கிறோம். எதிர்க்கட்சியிலும் இருந்திருக்கிறோம். ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியில் தான் அதிகம் இருந்திருக்கிறோம். அவ்வாறு இருக்கும்போது எங்களுக்கு ஒரே பாதுகாப்பு நீதிமன்றம் மட்டும் தான். ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு தருகின்ற அமைப்பு. இன்றைக்கு போலீசார் எழுந்து நின்று வணக்கம் சொல்வார்கள். நாளை வண்டியில் ஏறு என்று சொல்வார்கள். எப்போதும் நீதிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் நீதியரசர்கள் தான்' என்றார்.

மனநிலையும் காரணம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் 'தமிழகத்தில் இன்றைக்கு சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அதில் அதிகமாக இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. பொதுவாக விபத்துகளுக்கு அதிவேகம் காரணம் என்று கூறப்பட்டாலும், அதனை ஓட்டுகின்ற டிரைவர்களின் மனநிலையும் காரணமாக இருக்கிறது. ஆகவே வாகனத்தை இயக்குபவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். விபத்துகளால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு நீதி தாமதம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன.

விபத்துகளில் படுகாயம் அடைபவர்களை கண்டும் காணாமல் செல்வதை தடுப்பதற்காக, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி இன்றைக்கு பல லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், குற்றவியல் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனாசந்திரா நன்றி கூறினார்.


Next Story