ரூ.54.60 கோடியில் 66 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு


ரூ.54.60 கோடியில் 66 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
x

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை அகற்றிடும் வகையில் ரூ.54.60 கோடியில் 66 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை முற்றிலும் அகற்றிடும் வகையில், சென்னை பெருநகர பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்பினை இயந்திரமயமாக்க, மொத்தம் ரூ.54.60 கோடி மதிப்பீட்டில் 66 கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்திட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம், 426 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள, சுமார் 86 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், மக்களுக்கு தேவையான அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் மற்றும் உருவாகும் கழிவுநீரை அறிவியல் பூர்வமான முறையில் சுத்திகரிப்பு செய்து, பாதுகாப்பான முறையில் வெளியேற்றவும், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி பராமரித்து வருவதோடு அவற்றை தொடர்ந்து மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமானது சுமார் 4,149 கி.மீ. நீளம் கொண்ட கழிவுநீர் கட்டமைப்பினை பராமரித்து வருகிறது.

இந்நிலையில், அரசு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுமையாக ஒழித்திட தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பெருநகர சென்னை பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பின் பராமரிப்பினை முற்றிலும் இயந்திரமயமாக்க முனைப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென, தேவையான இயந்திரங்கள் படிப்படியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்பகுதியாக, முப்பது எண்ணிக்கையில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரம் மற்றும் தூர்வாரும் இயந்திரம், எட்டு எண்ணிக்கையில் இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரம், பத்து எண்ணிக்கையில் ஒன்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அடைப்பு நீக்கும் மற்றும் உறிஞ்சும் இயந்திரம், பத்து எண்ணிக்கையில் எட்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரம், எட்டு எண்ணிக்கையில் பதிமூன்றாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் மற்றும் கழிவுநீர் அடைப்பு நீக்கும் இயந்திரம் என, ரூ.54.60 கோடி மதிப்பீட்டில் மொத்தம் அறுபத்தாறு (66) எண்ணிக்கையில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை, மாநில நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் தூய்மை இந்தியா அரசின் திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்திட, முதல்-அமைச்சர் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, தமிழ்நாட்டில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையினை முற்றிலும் அகற்றிடும் வகையில், கழிவுநீர் கட்டமைப்பு பராமரிப்பினை இயந்திரமயமாக்க இவ்வரசு மேற்கொண்டுள்ள சீரிய நடவடிக்கைகளில், முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story