மகன்கள் அபகரித்துக்கொண்ட சொத்து, நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும்
மகன்கள் அபகரித்துக்கொண்ட சொத்து, நகை, பணத்தை மீட்டுத்தபர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி கோரிக்கை மனுகொடுத்தார்.
மகன்கள் அபகரித்துக்கொண்ட சொத்து, நகை, பணத்தை மீட்டுத்தபர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி கோரிக்கை மனுகொடுத்தார்.
குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 399 மனுக்களை கலெக்டர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிலுவை வைக்கக்கூடாது
அப்போது கலெக்டர் பேசுகையில் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த 2,000 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதனை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். மனுக்களை நிலுவையில் வைத்து இருக்கக் கூடாது. முடியாது என்றால் பொதுமக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் கொடிநாள் வசூல் ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் இன்னும் பாக்கியாக உள்ளது. இதனை அனைத்து அலுவலர்களும் விரைந்து வசூலிக்க வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரம் மதிப்பிலான ஊன்றுகோல் மற்றும் மூளை முடக்கு வாதம் சிறப்பு நாற்காலி வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட நடமாடும் சிகிச்சை வாகனத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.
மீட்டுத்தர வேண்டும்
நாட்டறம்பள்ளி வட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி சரோஜா என்பவர் அளித்த மனுவில், என் கண்வர் வெங்கடாசலம் ஓய்வுப்பெற்ற ராணுவ வீரர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நான் என் 2 மகன்கள் பராமரிப்பில் வசித்து வந்தேன். எனக்கு சொந்தமான நகை, பணம், சொத்து ஆகியவற்றை என் 2 மகன்களும் பறித்துக்கொண்டனர். வயதான காலத்தில் என்னை கவனிக்காமல் வெளியே விரட்டி விட்டனர். எனவே, என்னிடம் இருந்து அபகரிக்கப்பட்ட சொத்து, நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும். என் மகன்களிடம் இருந்து எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், உதவி ஆணையர் (கலால்) பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.