சொத்து பட்டியல் வெளியீடு விவகாரம்: தி.மு.க.விற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் -கே.எஸ்.அழகிரி பேட்டி


சொத்து பட்டியல் வெளியீடு விவகாரம்: தி.மு.க.விற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் -கே.எஸ்.அழகிரி பேட்டி
x

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவகாரத்தில் தி.மு.க.விற்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுமதி அன்பரசு, எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், ஆர்.டி.ஐ. பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய சமூக அமைப்பில் மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டவர் அம்பேத்கர். சாதி, மொழி, மதம், நிறத்தால் மனிதர்களை பிரிக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழியை சட்டத்தில் கொடுத்தவர். அம்பேத்கரின் உயர்ந்த தியாகம் தான் இந்தியாவில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. காங்கிரஸ் கட்சி அதற்கு உதவியாக இருந்தது. இதனால், தான் இன்றைக்கு நல்ல அரசியல் சட்டம் நமக்கு கிடைத்துள்ளது. ஆனால், மோடி அரசு அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. சனாதனம் என்கின்ற பெயரில் பழமையே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்த ஒரு காலத்திலும் அது வெற்றி பெறாது.

பக்கபலமாக இருப்போம்

ஊழல் பட்டியல் வெளியிடுவது என்பது யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம். எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை ஏன் தமிழகத்தில் கட்டவில்லை என்று மக்கள் கேட்டு வருகிறார்கள். தமிழக மக்களின் நலனுக்காக ஏன் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டக்கூடாது என்று கேட்கிறோம். ஆனால், அதை செய்ய முடியாமல் சுய விளம்பரத்திற்காக அவர் ஊழல் பட்டியல் என்று வெளியிட்டுள்ளார். நானும் பிரதமர் மோடி மீது ஊழல் பட்டியலை 100 பக்கத்திற்கு கொடுக்க முடியும். அதற்கான ஆதாரம் உள்ளது. இன்று அதெல்லாம் முக்கியமில்லை. நாம் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். தி.மு.க. இதை எதிர்கொள்ளும். தோழமை கட்சிகள் நாங்கள் அதற்கு பக்கபலமாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story