சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர், 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுமியை காதலித்ததாகவும், ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை தேடி வருகின்றனர்.