பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு


பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்  அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு
x

பெண் குழந்தைகளை பாதுகாக்க அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனஅலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்



விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை பாதுகாப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனைகூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண் குழந்தைகளுக்கு கல்வி

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேசிய அளவில் 1000-க்கு 918 குழந்தைகள் பாலின வீதமும், தமிழகத்தில் 1000-க்கு 943 குழந்தைகள் பாலின வீதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் 2021-2022 கணக்கெடுப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் பாலின விகிதம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதையே தொடர்ந்து நீடித்திடும் வகையில் பெண் குழந்தைகளை பாதுகாத்திடவும், பெண் குழந்தைகளுக்கு முழுமையாக கல்வி கற்க உறுதுணையாக இருந்திடும் வகையிலும் அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி பாதுகாத்திட வேண்டும்.

விழிப்புணர்வு

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறுகள் நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இளம்வயது பெண்கள் மற்றும் புதுமண தம்பதியினருக்கு மருத்துவர்களின் ஆலோசனைகளை உரிய காலத்தில் வழங்கி தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் நடத்துவதை தடை செய்து பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்குவதுடன், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ராஜம்மாள், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் வேல்முருகன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், சமூகநலத்துறை கண்காணிப்பாளர் சீதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story