நாமக்கல், பரமத்தியில்தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், பரமத்தியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டு கொள்ளாத மத்திய மற்றும் அம்மாநில பா.ஜனதா அரசுகளை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி தலைமை தாங்கினார். ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி லட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தொடர்ந்து மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை கண்டு கொள்ளாத, பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணிகளில் உள்ள மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பெண் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்தி
இதேபோல் பரமத்தி பழைய கோர்ட்டு அருகே மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் பிரியா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ராதிகா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, பொதுக்குழு உறுப்பினர் இந்திராணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் அம்பிகா பாண்டியன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பரமத்தி, கபிலர்மலை மற்றும் மோகனூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தன்ராஜ், சண்முகம், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ் பாபு உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.