ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
x

காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணி நீக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 136 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 31-ந் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்போது, பல்கலைக்கழக நிர்வாகம் தமிழக அரசுடன் பேசி, மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நிதிச்சுமையை காரணமாக சொல்லி பணி நீக்கம் செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருப்பதாகவும், எனவே, உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கைது

இந்த நிலையில், நேற்று மாலை தர்ணா போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, உடனடியாக கலைந்து செல்ல வேண்டும். கோரிக்கைகளை சட்டரீதியாக போராடி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பலர் கலைந்து செல்ல மறுத்ததால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் ராஜம்பாடி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களை பார்ப்பதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜா வந்தபோது, அவரையும் சங்க நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டித்து, அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இரவு 7 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதான அனைவரும் இரவில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story