நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்-செயலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை


நாமக்கல் மாவட்டம் முழுவதும் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்-செயலாளர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை
x

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என குற்றம்சாட்டி தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

வேலைநிறுத்தம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வு பெறும் நாளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 169 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் சுமார் 900 பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் பெரும்பாலான தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் நேற்று மூடி கிடந்தன. எனவே அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.

அவசர கூட்டம்

இதற்கிடையே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அவசர கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், தலைவர் சிவசங்கரன், பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈரக்கும் வகையில் வருகிற 13-ந் தேதி அன்று மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தவும், 27-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும் போராட்டம்

கூட்டத்திற்கு பின்னர் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பயிர்க்கடன் தள்ளுபடியில் விதிமீறல் என்று குற்றம்சாட்டி நாமக்கல், சேலம் மாவட்டங்களில் 15 தொடக்க கூட்டுறவு வங்கி சங்க செயலாளர்கள் மீது பணி ஓய்வுபெறும் நாளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாமக்கல், சேலம் மாவட்டங்களில் 406 கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் பணியை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 2 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் வருகிற 27-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story