தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மீனவ சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மீன் பிடி டோக்கன் அலுவலகம் அருகே நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மீனவர் சங்க பிரதிநிதி சகாயம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் என்.ஜே.போஸ், சேசுராஜா, எமரிட் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்தும் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பஸ்நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் படகுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 2 பேர் உயிரை காப்பாற்றிய ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மற்றும் படகின் டிரைவருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.